நத்தம் ஒத்தினிப்பட்டி வடகாட்டான் கோயிலில் ஆடி படையல் திருவிழா
நத்தம், ஆக. 6: நத்தம் அருகே, ஒத்தினிப்பட்டி வடகாட்டான் கோயில் ஆடி படையல் திருவிழாவில் 5 ஆயிரம் ஆண்களுக்கு கறிவிருந்து பரிமாறப்பட்டது. நத்தம் அருகே குட்டுப்பட்டி ஊராட்சி ஒத்தினிப்பட்டியில் அமைந்துள்ள வடகாட்டான் கோயிலில் விவசாயம் செழிக்கவேண்டி ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் படையல் விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆடி படையல் விழா நேற்று முன்தினர் இரவு நடந்தது. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 10க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்களை வெட்டி அசைவ உணவு தயாரித்தனர்.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் வடகாட்டான் சுவாமிக்கு கறி விருந்து படையலிடப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து நடந்தது. அதிகாலை 4 மணியளவில் துவங்கிய கறி விருந்து விடிய, விடிய நடந்தது. இதில் ஒத்தினிப்பட்டி, பஞ்சையம்பட்டி, ஒ.புதூர், லெட்சுமணபுரம், குட்டுப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.