திண்டுக்கல் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை
திண்டுக்கல், அக். 4: திண்டுக்கல்லில் நேற்று மாலை 6 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. துவக்கத்தில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல, செல்ல கனமழையாக மாறியது. மேலும் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது இதனால் திண்டுக்கல் நகர் பகுதி மட்டுமல்லாது புறநகர் மற்றும் நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் உள்பட பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் அனைத்து பகுதி ரோடுகளிலும் மழைநீர் ஆறு போல் ஓடியது. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
திண்டுக்கல்லில் நாகல் நகர், எம்.வி.எம் கல்லூரி, திருச்சி ரோடு, கச்சேரி தெரு ஆர்.எம்.காலனி, வத்தலக்குண்டு பைபாஸ் ரோடு, பேகம்பூர், பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரததால் மழைநீர் வடிந்து செல்ல முடியாமல் ரோடுகளில் தேங்கி நின்றது. திருச்சி ரோட்டில் மரம் முறிந்து போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. 6 மணிக்கு பெய்ய துவங்கிய மழை 9 மணிக்கு மேலும் தொடர்ந்தது. ரோடுகளில் மழைநீர் தேங்காமல் நிற்க மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.