திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், அக். 25: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் உயரம் தடைபட்டோர் தினத்தையொட்டி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் பொன் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயந்தி, மாவட்ட செயலாளர் பகத்சிங், மாவட்ட பொருளாளர் கருப்புசாமி, திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், பழநி ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி, ஆத்தூர் ஒன்றிய தலைவர் ஆறுமுக வள்ளி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் உயர வளர்ச்சி தடைபட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவித்து அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்புகளில் சிறப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும். உயர வளர்ச்சி தடைப்பட்டோருக்கான சிறப்பு வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகையை ரூ.5000 உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 50க்கும் மேற்பட்ட உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.