ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை குறைவு: கிலோ ரூ.10க்கு விற்பதால் விவசாயிகள் கவலை
ஒட்டன்சத்திரம், செப். 14: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.10க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து விற்கின்றனர். விவசாயிகளிடம் காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும், கேரள மாநிலத்திற்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தேவத்தூர், அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், சத்திரப்பட்டி, விருப்பாச்சி, வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், கண்ணனூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை தீவிரமாக நடந்து வரும் நிலையில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை, முகூர்த்த தினங்கள் இருந்ததால் தக்காளியின் தேவை அதிகரித்து விலையும் அதிகரித்தது. தற்போது பயன்பாடு குறைந்த நிலையில் மார்க்கெட்டுகளில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை குறைந்துள்ளது.
கடந்த வாரம் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. தற்போது வரத்து அதிகரிப்பால் தக்காளி பெட்டி ரூ.150க்கு விற்பனையாகிறது. அதாவது ஒரு கிலோ ரூ.10 விலை போகிறது. இதனால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.