வடமதுரை நான்கு வழிச்சாலையில் ‘ராங் சைட்’ பயணத்தால் அடிக்கடி விபத்து
வடமதுரை, டிச. 12: வடமதுரை பகுதி நான்கு வழிச்சாலையில் ராங் சைடில் வாகனங்களை ஓட்டி வருபவர்களால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வடமதுரை நகரின் வடக்கு பகுதியில் திண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலை செல்கிறது. இதில் இடது புறமாக செல்லும் சாலை திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி செல்கிறது. அதேபோல் வலது புறம் சாலையில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்த இரண்டு பக்க சாலையிலும் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கம்பம், தேனி, குமுளி, சபரிமலை ஐயப்பன் கோயில், கொடைக்கானல், கோட்டயம் மூணாறு, வத்தலக்குண்டு, சின்னமனூர் ஆகிய நகரங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் எப்போதும் இந்த சாலை அதிக போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நான்கு வழிச்சாலையின் இரண்டு புறமும் டூவீலர்கள் செல்வதற்கு தனியாக பாதை ஒதுக்கப்பட்டு வெள்ளை கோடு போடப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி டூவீலர் செல்லும் பகுதியில் எதிர்திசையில் அதிகவேகமாக சிலர் டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் சரியான திசையில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். மேலும் திண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள தனியார் வணிக வளாகங்கள் லாரி எடை போடும் மெஷின் நிலையத்திற்கு கனரக வாகனங்களை ஓட்டி வருபவர்கள் ராங் சைடில் வருவதால் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இதேபோல் தென்னம்பட்டி பைபாஸ் மற்றும் தும்மலக்குண்டு பிரிவிலிருந்து திண்டுக்கல் சாலையில் உள்ள வடமதுரை துணை மின் நிலையம் வரையில் எதிர் திசையில் ராங் சைடில் டூவீலரில் எந்த நேரமும் பயணிக்கின்றனர். இதனால் இப்பகுதியிலும் சரியான திசையில் வருபவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். சிலர் விபத்தில் அடிபட்டு இறந்தும் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடமதுரை நான்கு வழிச்சாலையில் ராங் சைடில் செல்பவர்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.