பயிர்களுக்கு சாம்பல் சத்தை பரிமாற்றம் செய்யும் முறைகள் வேளாண் துறையினர் ஆலோசனை
பழநி, டிச. 12: மண்ணில் உள்ள சாம்பல் சத்தை பயிர்களுக்கு பரிமாற்றம் செய்யும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: பழநி திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதல் புதிய பொட்டாஷ் பாக்டீரியா திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பயிர் வளர்ச்சிக்கு தேவையான முதன்மை சத்துக்களில் சாம்பல் சத்து (பொட்டாசியம்) இன்றியமையாதது. நமது மண்ணில் சாம்பல் சத்துதான் அதிகளவில் உள்ளது. ஆனால், மண்ணில் 2 சதவீத சாம்பல் சத்து மட்டுமே பயிர்களுக்கு பரிமாற்றம் செய்யத்தக்க வகையில் உள்ளது. எனவே, மண்ணில் கட்டுண்டு கிடக்கும் சாம்பல் சத்தை மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பல்வேறு செயல் திறன்களால் அமிலத்தை உற்பத்தி செய்து நீரில் கரையும் சாம்பல் சத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கிறது.
இந்த பொட்டாஷ் பாக்டீரியா மண்ணில் வெப்பநிலை 15 டிகிரி செல்சியசில் இருந்து 42 டிகிரி செல்சியஸ் வரை நன்கு வளரக்கூடியது. இது குறைந்தபட்சம் அமில காரத்தன்மை (3.5) உள்ள மண்ணிலும் அதிகபட்ச அமில காரத்தன்மை (11.0) வரை உள்ள மண்ணிலும் தாங்கி வளரக்கூடியது. இந்த நுண்ணுயிரியானது மண்ணில் அதிகளவு உப்பு இருந்தாலும் அதிக உவர் தன்மை இருந்தாலும் தாங்கி வளரும் தன்மை உடையது. இந்த நுண்ணுயிரி பாக்டீரியா மற்றும் பூஞ்சாணங்களால் உண்டாகும் நோய்களில் இருந்து பயிர்களை பாதுகாத்து பயிர்களின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.
பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகள் உற்பத்தி செய்து பயிர்கள் ஆரோக்கியமாக வளர உதவி செய்கிறது. இதனால் மகசூல் 25 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இந்த பொட்டாஷ் பாக்டீரியா திரவ வடிவில் (500 மி.லி) தொப்பம்பட்டி வேளாண் விரிவாக்க மைய கிடங்கில் மானிய விலையில் கிடைக்கிறது. தற்போது பொட்டாஷ் விலை உயர்ந்துள்ளதால் இதற்கு மாற்று உரமாக இந்த பொட்டாஷ் பாக்டீரியா உயிர் உரத்தை விவசாயிகள் பயன்படுத்தலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.