பெண்ணை மிரட்டி நகை பறிப்பு
வேடசந்தூர், ஆக.12: வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் (53). இவரது மனைவி பாண்டியம்மாள் (48). இவர்களது வீடு கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகில் தோட்டத்தில் உள்ளது. இந்தநிலையில், நேற்று முன் தினம் இரவு, திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி பாண்டியம்மாள் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
இது குறித்து வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.