நிலக்கோட்டை தாதன்குளத்தில் பள்ளி கேட்டில் பழுதடைந்த குடிநீர் தொட்டி
நிலக்கோட்டை, செப். 3: நிலக்கோட்டை அருகே மட்டப்பாறை தாதன்குளத்தில் பள்ளி நுழைவுவாயிலில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே இத்தொட்டியை உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நிலக்கோட்டை ஒன்றியம் மட்டப்பாறை ஊராட்சிக்குட்பட்டது தாதன்குளம் கிராமம். இப்பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
அதன்பின் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை மட்டும் மராமத்து பணி என்ற பெயரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் வெள்ளை வண்ணம் மட்டுமே அடித்தனர். மற்றபடி எந்தவொரு மரமாத்து பணியும் பார்க்கவில்லை. இதனால் தற்போது அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அடிப்பாக தூண்கள் முதல் மேல் பகுதி வரை பல்வேறு இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து உதிர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு உள்ளது.
இவ்வாறு மிகவும் ஆபத்தான நிலையிலுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி பள்ளி நுழைவு வாயிலில் இருப்பதால் அதன் வழியாக தினந்ேதாறும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் மழைக்காலம் துவங்க இருப்பதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக அப்புறப்படுத்தி புதிய தொட்டி கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.