திண்டுக்கல் அருகே டூவீலர் மீது கார் மோதி 2 பேர் பலி
திண்டுக்கல், செப். 3: திண்டுக்கல் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் டிரைவர் படுகாயமடைந்தார். திண்டுக்கல் அருகே தருமத்துப்பட்டி காளியம்மன் கோயில் வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் முருகானந்தம் (53). முருகன் (55). கூலித்தொழிலாளர்கள். இவர்கள் இருவரும் சொந்த வேலையாக டூவீலரில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் வந்து விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
டூவீலரை முருகானந்தம் ஓட்டினார். திண்டுக்கல்- பழநி சாலையில் குஞ்சனம்பட்டி அருகே வந்த போது, எதிரே தருமத்துப்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார், இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் முருகானந்தம், முருகன் டூவீலரில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரை ஓட்டி வந்த தருமத்துபட்டியை சேர்ந்த கோகுல்நாத் (25) படுகாயமடைந்தார். தகவலறிந்து திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோகுல்நாத்தை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பலியான இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டூவீலர் மீது கார் மோதி இருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.