கூடுதல் பஸ் கோரி மாணவர்கள் சாலை மறியல்
நத்தம், செப். 2: நத்தம் அருகே செந்துறையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பிள்ளையார் நத்தம், கோட்டைப்பட்டி, திரு நூத்துப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து செந்துறை பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த 26ம் தேதி கூடுதல் பஸ் வசதி கேட்டதை தொடர்ந்து நத்தத்திலிருந்து செந்துறை வரை சென்ற டவுன் பஸ்ஸை பள்ளி நேரத்தையொட்டி கோட்டைப்பட்டி வரை நீட்டித்தனர்.
இந்நிலையில் பிள்ளையார்நத்தம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் செந்துறை பள்ளிக்கு வரும் வகையில் அந்த டவுன் பஸ்சை பிள்ளையார்நத்தம் வரை நீட்டித்து இயக்க வலியுறுத்தி கோட்டைப்பட்டி பிரிவில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திடீரென காலை 9 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு செந்துறை வருவாய் ஆய்வாளர் முத்துச்செல்வி, நத்தம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளர் தினகரன், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியபின், அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.