நெய்க்காரப்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்: நெடுஞ்சாலைத்துறையினர் சர்வே
பழநி, செப். 2: பழநி அருகே நெய்க்காரப்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். பழநியில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சி. இவ்வூரின் வழியாக கொழுமம், கொமரலிங்கம் மற்றும் உடுமலை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சாலை செல்கிறது.
இந்நிலையில் நெய்க்காரப்பட்டி கடைவீதி பகுதியில் இச்சாலையின் இருபுறங்களிலும் அதிகளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி விபத்து நிகழ்ந்து வந்தது. எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நெடுஞ்சாலைத்துறையினர் இச்சாலையில் சர்வே பணிகளை மேற்கொண்டனர்.
நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான எல்லை வரை அளவீடு செய்யப்பட்டு குறியீடு பொறிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்திருந்த வணிகர்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.