தண்டவாளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? தெலங்கானா இளம்பெண் இறப்பு குறித்து ஆர்டிஓ விசாரணை
ஈரோடு,ஜூலை10:தெலங்கானா மாநிலம் ரங்கரெட்டி மாவட்டத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சிவக்குமார்.இவரது மனைவி மாதவி (24). கடந்த 2021ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. 11 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 6ம் தேதி, ரங்கரெட்டி மாவட்டத்தில் இருந்து சபரி எக்ஸ்பிரஸ் ரயில் ஜெனரல் பெட்டியில் கோவை செல்ல மாதவி பயணித்துள்ளார்.
கடந்த 7ம் தேதி முற்பகல் 11:30 மணிக்கு முன்னதாக மகுடஞ்சாவடிக்கும் மாவெலிபாளையத்துக்கும் இடையே தண்டவாளத்தில் இறந்த நிலையில் மாதவி சடலமாக கிடந்தார்.
உடலை கைப்பற்றிய ஈரோடு ரயில்வே போலீசார் பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆதார் கார்டை கொண்டு மாதவியின் முகவரியை கண்டுபிடித்தனர். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து இருக்கலாம் என ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இருப்பதால் ரயில்வே டிஎஸ்பி மற்றும் ஈரோடு ஆர்டிஓ ஆகியோர் விசாரணையை துவக்கி உள்ளனர்.