ஒகேனக்கல்லில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை
பென்னாகரம், செப்.30: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முறைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். பென்னாகரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தோசம் தலைமையில் பென்னாகரம், ஒகேனக்கல் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஒன்றிணைந்து மழைக்காலங்களில் ஆபத்தான நீர் நிலைகள் மற்றும் ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுபவர்களை காப்பாற்றி மீட்கும் முறை, மீட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் முறை, வெள்ளப்பெருக்கின் போது கவச உடைகளுடன் ஆற்றில் மீட்பு படகுகளை இயக்கும் முறை குறித்து தீயணைப்பு வீரர்கள் ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறை பகுதியில் ஒத்திகை மற்றும் செயல் விளக்கம் அளித்தனர். மேலும் மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். காவிரி ஆற்றில் ஆழமான பகுதிகளில் குளிப்பதை தவிர்க்கும் முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூத்தப்பாடி கிராம நிர்வாக அலுவலர் பொற்கொடி மற்றும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.