சிக்னலில் டூவீலர் மீது அரசு பஸ் மோதல்
தர்மபுரி, நவ. 28: தர்மபுரியில் சிக்னலில் சென்ற டூவீலர் மீது மோதி அரசு பஸ் ஏறிய விபத்தில், நிலைதடுமாறி கீழே விழுந்த தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை உழவர் தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி (29). இவரது மனைவி பிரபா (23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நேற்று முன்தினம், சொந்த வேலையாக, கணவன், மனைவி இருவரும் நகராட்சி அலுவலகத்துக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். டூவீலர் பென்னாகரம்- தர்மபுரி மெயின் ரோடு, நான்குரோடு சிக்னலில் நின்று கொண்டிருந்தது. அப்போது, சாலையின் நான்கு பக்கங்களிலும், வாகனங்கள் வரவில்லை என்றதால், திருப்பதி சற்று கவனக்குறைவாக டூவீலரை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு பஸ் ஒன்று, சிக்னல் சாலையில் வந்தது. வந்த வேகத்தில் அந்த பஸ் டூவீலர் மீது மோதி, அதன் மீது ஏறியது. இதில், டூவீலரில் இருந்து கீழே விழுந்த தம்பதி சற்று தள்ளி நகர்ந்ததால், நூலிழையில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர், இருவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த விபத்து காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.