அவரை விளைச்சல் அமோகம்
தர்மபுரி, அக்.28: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளது. இதேபோல், வடகிழக்கு பருவமழையும் பரவலாக பெய்து வருகிறது. பருவமழையை எதிர்பார்த்து தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட 7 தாலுகாக்களிலும் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் அவரை பயிரை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தர்மபுரி ஒன்றியத்தில் குள்ளனூர், கடகத்தூர், மூக்கனூர், செட்டிக்கரை, வெங்கட்டம்பட்டி உள்ளிட்ட ஒன்றியம் முழுவதும் சுமார் 1000 ஏக்கருக்கும் மேல் அவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக விளைச்சல் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ அவரைக்காய்க்கு அதிகபட்சமாக ரூ.30 வரை விலை கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement