பெல்லுஅள்ளியில் வரப்பு தகராறில் இருதரப்பினர் மோதல் பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு
பாலக்கோடு, ஆக. 27: மாரண்டஅள்ளி அடுத்த பெல்லுஅள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி காளப்பன்(39). இவர் பக்கத்து நிலத்தை சேர்ந்த மாதையன் என்பவரது நிலத்தில் உள்ள, பொது வரப்பை காலம் காலமாக நடைபாதையாக பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த 22ம் தேதி காலை காளப்பன், வரப்பு பாதை வழியாக தனது தோட்டத்திற்க்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மாதையன் மகன் அருள்(28), அவரது தாய் இன்பவள்ளி(55) ஆகியோர், வரப்பை வெட்டி நடைபாதையை சேதப்படுத்தி கொண்டிருந்தனர். இதனை காளப்பன் தட்டிகேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ‘இது எங்கள் நிலம் அப்படி தான் செய்வோம்’ என கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து இருதரப்பை சேர்ந்தவர்களும் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், இருதரப்பையும் சேர்ந்த அருள், இன்பவள்ளி, ராணி, கலைச்செல்வி, காளப்பன் ஆகிய 5 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.