கடத்தூர் அருகே காற்றுக்கு அறுந்து விழுந்த மின்கம்பி
கடத்தூர், செப். 26: கடத்தூர் அருகே தாளநத்தம் ஊராட்சி 4வது வார்டு பகுதியில், நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து, குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், பொம்மிடி மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மின் ஊழியர்கள், டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்தனர். மின் கம்பி அறுந்து விழுந்தபோது, அப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அறுந்து விழுந்த மின்கம்பியை சீரமைக்கும் பணியில், பணியாளர்கள் ஈடுபட்டனர். மின் கம்பி அறுந்து விழுந்ததால், அந்த பகுதியில் மின்விநியோகம் இல்லாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
Advertisement
Advertisement