சுகாதார வளாகத்தில் பழுதான மின்மோட்டார்
பாப்பாரப்பட்டி, அக்.24: பென்னாகரம் ஒன்றியம், பனைக்குளம் ஊராட்சி வத்திமரதஅள்ளி கிராமத்தில், சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த, சுமார் 800 பேர் வசிக்கின்றனர். இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் குளியலறை, கழிவறை மற்றும் துணி துவைக்கும் வசதியுடன் கூடிய, ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு முன்பு, சுகாதார வளாகத்துக்கு தண்ணீர் வழங்க பயன்படுத்திய ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்தது. மின் மோட்டாரை பழுது நீக்குவதற்காக கழற்றி எடுத்துச்சென்றனர். ஆனால், தற்ேபாது வரை மின் மோட்டாரை பழுது நீக்காததால் சுகாதார வளாகம் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டது. கிராமத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலையில் உள்ளனர். எனவே, பழுதான மின்மோட்டாரை சரிசெய்து, சுகாதார வளாகத்திற்கு பயன்பாட்டுக்கு திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.