பருவமழை முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்
காரிமங்கலம், அக்.24: காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, சர்வோத்தமன் ஆகியோர் பங்கேற்று வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்தும், ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகிய நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்புவது குறித்து கேட்டறிந்தனர். நீ ர்நிலைகளில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோர் செல்வதை தவிர்க்க, எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க, ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், டெங்கு உட்பட பல்வேறு காய்ச்சலை தடுக்கும் வகையில், கொசு மருந்து அடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் மேலாளர் கலைவாணி, உதவி பொறியாளர்கள் தமிழ்மணி, இளவேனில் ஸ்ரீதர், துணை பிடிஓ.,க்கள் சரளா, சரண்யா, சரத்குமார், கந்தப்பன், குமார் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.