குடைகள் விற்பனை ஜோர்
தர்மபுரி, அக்.23: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தில் குடை விற்பனை ஜோராக நடக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையில் இருந்து தப்பிக்கும் வகையில், குடை மற்றும் ஜெர்கின் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மழை சீசன் வியாபாரமான குடை, ஜெர்கின், ரெயின் கோட் விற்பனை கடைகள், தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோடு, திருப்பத்தூர் ரோடு, பென்னாகரம் ரோடு, கடைவீதி, பிடமனேரி ரோடு மற்றும் பென்னாகரம், பாலக்கோடு, அரூர் என அனைத்து பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் பிளாட்பார கடைகளில் அதிகளவு காணப்படுகின்றன. ரூ.70 முதல் ரூ.300 வரை பல்வேறு ரகங்களில் குடைகள் விற்கப்படுகின்றன. ரெயின் கோட், ஜெர்கின் உள்ளிட்டவை, ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘அனைத்து பகுதிகளிலும், பருவமழை தீவிரமடைந்துள்ளதால், குடை, ஜெர்கின், ரெயின்கோட் தேவை அதிகரித்துள்ளது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். விலையும் சீராக உள்ளதால், பொதுமக்கள் ஆர்வமாக வாங்குகின்றனர்,’ என்றனர்.