ஏரி, குளங்கள் நிரம்பியதால் பொதுமக்கள் குளிக்க தடை
தர்மபுரி, அக்.23: தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் 50 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளதால், பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சமீபகாலமாக பெய்து வரும் மழையின் காரணமாக, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், அணைகள் போன்ற நீர்நிலைகள் பல இடங்களில் 50 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ளன. மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், நீரோடைகள் மற்றும் அணைகள் போன்ற நீர்நிலைகளில் குளிக்க கூடாது. மேலும், குழந்தைகளை அருகில் செல்ல அனுமதிக்கக்கூடாது. கால்நடைகளை நீர்நிலைகளுக்கு அருகில் சென்று மேய்ச்சலுக்கோ, நீர் அருந்தவோ அனுமதிக்கக்கூடாது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார்.