5 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை
தர்மபுரி, நவ.21: தர்மபுரியில் ஒரு தாழ்தள பேருந்து உள்ளிட்ட 5 புதிய பேருந்து சேவையை கலெக்டர் தொடங்கி வைத்தார். விழாவில் எம்பி, எம்எல்ஏ பங்கேற்றனர். தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக சார்பில், தர்மபுரி-பென்னாகரம் வழித்தடத்தில், ஒரு புதிய தாழ்தள நகரப் பேருந்து சேவை மற்றும் புதிதாக 5 மகளிர் விடியல் பயண பேருந்து சேவைகள் தொடக்க விழா, நேற்று நடந்தது. தர்மபுரி- பென்னாகரம் (வழி) இண்டூர் பி.அக்ரகாரம் வழித்தடத்தில் ஒரு புதிய தாழ்தள (எல்எஸ்எஸ்) நகரப் பேருந்து சேவை, தர்மபுரி - மிட்டாரெட்டிஅள்ளி (வழி) கலெக்டர் அலுவலகம், வெங்கட்டம்பட்டி, தர்மபுரி- கோம்பை (வழி) கலெக்டர் அலுவலகம், பாளையம்புதூர், தர்மபுரி - லளிகம் (வழி) கலெக்டர் அலுவலகம், நல்லம்பள்ளி, அரூர் -பாப்பிரெட்டிப்பட்டி (வழி) கோபிநாதம்பட்டி, மருக்காலம்பட்டி, பொம்மிடி - அரூர் (வழி) கோபிநாதம்பட்டி, பி.துரிஞ்சிப்பட்டி ஆகிய 5 வழித்தடங்களில், பஸ் சேவைகளை, கலெக்டர் சதீஸ் தர்மபுரி திமுக எம்பி ஆ.மணி முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் குணசேகரன், முதுநிலை துணை மேலாளர் ராஜராஜன், உதவி மேலாளர்கள், கிளை மேலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் கலெக்டர் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டில் 6 புதிய வழித்தடங்கள் மற்றும் 108 வழித்தட நீட்டிப்பு மற்றும் வழித்தட மாற்றம் என மொத்தம் 114 வழித்தடங்களில் 127 பேருந்துகள் மூலம் 295 கிராம, நகரங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 2 லட்சத்து 78 ஆயிரத்து 157 பேர் பேருந்து வசதி பெற்று பயனடைந்துள்ளனர். மேலும், மொத்தம் 76 பேருந்துகள் புதிய பொலிவுடனும், மகளிர் விடியல் பயணம் செய்யும் 38 பேருந்துகள் புதிய பொலிவுடன் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டு வருகிறது,’ என்றார்.