தர்மபுரி வாலிபர் சிறையிலடைப்பு
தர்மபுரி, ஆக.15: தர்மபுரி செட்டிக்கரை ஜாலிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாது மகன் வடிவேல்(29). பழைய கார் வாங்கி விற்பனை செய்து வருகிறார். கனகேசன் கடந்த ஆண்டு வடிவேலை சந்தித்து, பழைய காரை விலைக்கு கேட்டார். அதன்படி, ஒரு காரை தேர்வு செய்து ரூ.6.15 லட்சத்திற்கு விலை பேசி முடித்தனர். முதல்கட்டமாக ரூ.4.60 லட்சத்தை கொடுத்த கனகேசன், மீதி தொகை ஆர்சி புத்தகம் தரும்போது தருவதாக தெரிவித்தார். ஆனால், வடிவேல் காரை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். மேலும், கொடுத்த பணத்தையும் தரவில்லை. இதுகுறித்து கனகேசன் அளித்த புகாரின்பேரில், தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வடிவேலை கைது செய்தனர். இதில், ஏற்கனவே காரை வாங்கியவரிடமும், அதற்கான தொகையை கொடுக்காமல் வடிவேல் ஏமாற்றி உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையிலடைத்தனர்.