தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்
தர்மபுரி, செப்.14: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் நல்லம்பள்ளி வட்டார குழு கூட்டம் சித்துராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் மாதையன், வட்டார செயலாளர் முருகேசன், ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் மணி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் சுப்ரமணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி, தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். வீடில்லாத விவசாய தொழிலாளர்களுக்கு, வீடு கட்டி கொடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், வரும் அக்டோபர் 7ம்தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தர்மபுரியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் வள்ளுவர், பழனி, கல்யாணசுந்தரம் மற்றும் வட்டாரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.