வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தர்மபுரி, அக். 13: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் குண்டல அள்ளி ஊராட்சி, ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு நினைவு திறனை மேம்படுத்தும் வகையில், மறதியை குறைக்கும் திறன், மாயாஜால நிகழ்ச்சி, வன விலங்குகளை, குறிப்பாக பாம்புகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்றார்.
தமிழ்நாடு வேளாண்மை துறை ஓய்வு பெற்ற இணை இயக்குநர் குணசேகரன் பேசும் போது, மாணவர்கள் தேர்வுகளை அணுகும் திறன், ஞாபக சக்தி, மறதி குறித்து பேசினார். தொடர்ந்து, மாயாஜால வித்தைகள் செய்து காண்பிக்கப்பட்டது. ஜெகந்நாதன் மாணவர்களின் நினைவாற்றல் குறித்து பேசினார்.
உங்கரானஹள்ளியை சேர்ந்த ராம்குமார் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் பாம்புகள் வகை, விஷத் தன்மை, பாம்புகளின் உணவு, சூழலியல் முக்கியத்துவம் என்ற தலைப்பில் வீடியோ மூலம் விளக்கினார். இந்த நிகழ்ச்சியில், பாம்புகளை அடிக்கக்கூடாது என்று மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர் ராகவேந்திரன் தலைமையிலான குழு செய்திருந்தது. ஆசிரியர் மாதையன் நன்றி கூறினார்.