மயானத்திற்கு செல்ல சாலை வசதி
தர்மபுரி, ஆக.13: தர்மபுரி மாவட்டம் பாலவாடி கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கலெக்டர் சதீஷிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பென்னாகரம் வட்டம் பாலவாடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்லும் சாலை இதுவரை மண்சாலையாகவே உள்ளது. இதனால் மயானத்திற்கு மழைகாலங்களில் செல்லும் போது, சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் போது, வழுக்கி விழும் நிலையுள்ளது. இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு எடுத்து செல்வதில் மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் மயானத்திற்கு ஈமகாரியங்கள் செய்வதற்காக செல்லும் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக பொதுமக்கள் நலன் கருதி பாலவாடி மயானத்திற்கு செல்லும் மண்சாலையை தார்சாலையாக மாற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.