வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, ஆக.13: தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் நேற்று மாலை அலுவலகத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வெளிநடப்பு செய்து, ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் மன் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரைவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவன் முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ராஜா வரவேற்று பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட அரசாணை வெளியிட வேண்டும். மூன்றாண்டுக்கு உட்பட்ட 564 அலுவலக உதவியாளர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில், அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்து, வாரத்திற்கு இரண்டு முகாம்கள் மட்டுமே நடத்த வேண்டும். திட்டப்பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம், கூடுதலான தன்னார்வலர்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இதனால், மாலை ஒரு மணி நேரம் வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் பகவதி நன்றி கூறினார். இதேபோல், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி தாலுகாக்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.