வனப்பகுதி மரங்களில் எழுதப்பட்ட மர்ம குறியீடுகள்
அரூர், ஆக.12: அரூர் அடுத்த பொய்யப்பட்டி வனப்பகுதியில் உள்ள மரங்களில், புரியாத மொழிகளில் மர்ம குறியீடுகள் எழுதப்பட்டுள்ளது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர்- தீர்த்தமலை சாலையில் பொய்யப்பட்டி, கீழானூர் பகுதிகளை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதியில் உள்ள 42க்கும் மேற்பட்ட மரங்களில், மரப்பட்டைகள் செதுக்கப்பட்டு, அதில் புரியாத மொழியில் குறியீடுகளும், எழுத்துக்களும் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதுடன், இது குறித்த தகவலை மாவட்ட வன அலுவலருக்கும் தெரியப்படுத்தனர். தொடர்ந்து வனப்பகுதியில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களோ, சமூக விரோதிகள் யாரேனும் செய்தார்களா என்ற கோணத்தில், வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘பொய்யப்பட்டி வனப்பகுதியில் உள்ள பொருசு, ஊஞ்சை போன்ற மர வகைகளில், புரியாத மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. எழுத, படிக்க தெரியாதவர்கள் இதனை எழுதியது போல் உள்ளது. தீவிரவாத குழுக்களாக இருக்க வாய்ப்பில்லை என்ற போதிலும், விசாரணை நடந்து வருகிறது,’ என்றனர்.