அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
தர்மபுரி, செப்.10: தர்மபுரி மாவட்டம், பெல்லுஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமை வகித்தார்.
கண்காட்சியில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட 60 அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் 7ம் வகுப்பு மாணவன் கிருத்தீஷ் குமார் செய்திருந்த தானியங்கி தண்ணீர் வழங்கும் இயந்திரம் முதல் பரிசையும், 9ம் வகுப்பு மாணவன் பிரதாப் காட்சிப்படுத்திய கை நடுங்காமை சோதனை இயந்திரம் 2ம் பரிசையும், மாணவி கீதாலஷ்மி காட்சிப்படுத்திய மலரின் பாகங்கள் பற்றிய முப்பரிமாண மாதிரி 3ம் பரிசையும் பெற்றது. இந்த கண்காட்சி மூலம் மாணவர்களுடைய அறிவியல் மனப்பான்மை மேலோங்கும். அதன் மூலம் அறிவியலில் சிறந்த வல்லுனர்களாக உருவாகும் எண்ணத்தில் அறிவியல் கண்காட்சி செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.