சாலையோரம் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்கள்
கடத்தூர், ஆக. 8: கடத்தூரில், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால், சாலையை கடக்க முடியாமல் மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், கடத்தூர் மற்றும் தர்மபுரி பிரதான சாலையில், கடத்தூர் மற்றும் மணியம்பாடி, ஓடசல்பட்டி, சில்லாரஅள்ளி, நத்தமேடு மோட்டாங்குறிச்சி கோம்பை, நல்லகுட்லஹள்ளி, புதுரெட்டியூர் என 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அத்தியாவசிய தேவைக்காக வந்து செல்கின்றன. இந்நிலையில், இருசக்கர வாகனங்கள் தர்மபுரி- பொம்மிடி சாலையில் வாகனங்களை நிறுத்துவதால், அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ,மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு பிரிவிற்கு செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், ‘களத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் படிக்கின்றனர். கடத்தூர் அம்பேத்கர் சிலை அருகே, தர்மபுரி-பொம்மிடி சாலையில் மாணவிகள் சாலையைக் கடந்து செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும், சாலையை கடக்க நீண்ட நேரமாகிறது. எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து மாணவிகளுக்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்,’ என்றார்.