உலக மண் தினம் கொண்டாட்டம்
தர்மபுரி,டிச.6: தர்மபுரி -பென்னாகரம் சாலை விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில், உலக மண் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்Qகளின் தலைவர் டி.என்.சி.இளங்கோவன் தலைமை வகித்தார். தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம், சினேகா பிரவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் மாணவ, மாணவிகள் உலக மண் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இயற்கையின் கொடையான வளமான மண்ணை சுற்றுச்சூழல் சீர்கேடுகளில் இருந்து பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது, அனைவரது கடமை என அறிவுறுத்தும் வகையில், மாணவர்கள் ஓவியம் வரைந்து பார்வைக்கு வைத்தனர். 8ம் வகுப்பு மாணவன் ஹரிநேசன், உலக மண் தினம் குறித்து விளக்கினார். சுற்றுச்சூழல் மன்ற தலைவி வித்யா வரவேற்றார். பள்ளி முதல்வர் ஜெயசீலன், சுற்றுச்சூழல் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர், தாவரவியல் ஆசிரியர் சவுந்திரபாண்டியன் நன்றி கூறினார்.