குட்கா கடத்தல் வழக்கில் வாலிபர் கைது
பாப்பாரப்பட்டி, டிச.2: பாப்பாரப்பட்டி அருகே சரக்கு வாகனத்தில் 200 கிலோ குட்கா கடத்திய வழக்கில் தேடப்பட்ட வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி எட்டிக்குட்டையை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் அருள்(25). இவர் பெங்களூருவில் இருந்து சரக்கு வாகனம் ஒன்றில் குட்கா கடத்தி வருவதாக பாப்பாரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாப்பாரப்பட்டி - பென்னாகரம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தை ஓட்டிவந்தவர், கீழே இறங்கி தப்பியோடிவிட்டார்.
வாகன சோதனை செய்தபோது, அதில் தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் 200 கிலோ இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சரக்கு வாகனம் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அருளை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று பாப்பாரப்பட்டி -பென்னாகரம் சாலையில் ஆலமரத்துப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் நின்றிருந்த அருளை, எஸ்ஐ மாரி தலைமையிலான போலீசார், சுற்றிவளைத்து மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.