நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 16,058 பேர் பயன்
தர்மபுரி, அக்.26: தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை நடந்த 12 நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாமில், 16,058 பேர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை ெபற்று பயனடைந்துள்ளனர். மேலும், 929 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இம்முகாமை கலெக்டர் சதீஸ் நேரில் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவைகள், ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் குறித்து பார்வையிட்டார். இம்முகாமின் மூலம், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்று திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், 30 நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதுவரை 12 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 16058 பேர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுள்ளனர். தொழிலாளர் நலத்துறை மூலமாக 5,366 பேர் பயனடைந்துள்ளனர். தூய்மை பணியாளர்கள் 822 பேரும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை431 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 929 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இசிஜி 4442 பேருக்கும், எக்ஸ்ரே 1347 பேருக்கும், அல்ட்ரா சவுண்ட் 1076 பேருக்கும் எக்கோ 1032 பேருக்கும், ரத்தம் பரிசோதனை 8,235 பேருக்கும், பெண்களுக்கு கர்ப்பபை புற்றுநோய் கண்டறில் 1680 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 324 பெண்களுக்கு பாசிடிவ் என வந்துள்ளது. பழங்குடியினர் நலத்துறை மூலம் 607 பேருக்கு கார்டு கொடுத்துள்ளோம்.
மேலும், பரிசோதனைக்கு வரும் அனைத்து நபர்களுக்கும் ஆபா கார்ட் உருவாக்கப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைக்கு பதிவு செய்து தரப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேல் பரிசோதனைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். பல்வேறு மருத்துவ முகாம்களின் மூலம் நோயாளிகளை பரிசோதித்து சிறப்பு மருத்தவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாமில் கலந்து கொள்ள செய்து, பயனடைய மருத்துவ குழு மூலம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து பொதுமக்களும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
நேற்று நடந்த முகாமில், தர்மபுரி நகரமன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகர், சுகாதாரத்துறை துணை இயக்குநர் ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் சேகர், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் அசோக்குமார், நகர் நல அலுவலர் லட்ஷியவர்ணா, மருத்துவர்கள் பாலசுப்பிரமணியம், சிவகுமார், அரசுத்துறை அலுவலர்கள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.