தொடர் மழை எதிரொலி: தர்மபுரியில் தக்காளி, பீன்ஸ் விலை உயர்வு
தர்மபுரி, அக்.26: தர்மபுரியில், தொடர் மழை காரணமாக, தக்காளி மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்தது. தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், இருமத்தூர், கம்பைநல்லூர், பென்னாகரம், அதகபாடி, மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. பாலக்கோடு, தர்மபுரி, கம்பைநல்லூர் தக்காளி சந்தைக்கு சராசரி 100 டன் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு சென்னை, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் பிற மாவட்டங்களுக்கு தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக தக்காளி அறுவடை பாதித்துள்ளது. இதனால் தக்காளி விலை ஒரே மாதத்தில், இரு மடங்காக உயர்ந்துள்ளது. தர்மபுரி உழவர் சந்தையில், கடந்த 21ம் தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.16 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று, வரத்து குறைவால் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.26க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், ரூ.20 ஆக இருந்த கத்திரிக்காய் ரூ.26க்கும், ரூ.275ஆக இருந்த பச்சை பட்டாணி ரூ.300க்கும், ரூ.70 ஆக இருந்த பீன்ஸ் ரூ.106க்கும், ரூ.100 ஆக இருந்த டபுள்பீன்ஸ் ரூ.140க்குமாக பல்வேறு காய்களின் விலை உயர்ந்து விற்பனையானது.