உழவரைத்தேடி வேளாண் திட்ட முகாம்
பாப்பிரெட்டிப்பட்டி, ஆக.11: பாப்பிரெட்டிப்பட்டி அருகே கே.தாதம்பட்டியில் உழவரைத்தேடி வேளாண் திட்ட முகாம் நடந்தது.பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரம் கே.தாதம்பட்டியில் வேளாண்துறை சார்பில், உழவரைத்தேடி வேளாண் திட்ட முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் அருணன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசுகையில், விவசாயிகள் அனைவரும் வேளாண்மைத்துறையை அணுகி, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மானிய உதவிகளை பெற்று பயனடைய வேண்டும். விவசாயிகள், தங்கள் வருவாயை அதிகரித்துக் கொள்ள ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து, அதிக லாபம் பெற வேண்டும் என்றார்.
உதவி பொறியாளர் சதாம் உசேன் பேசுகையில், பொறியியல் துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், டிராக்டர் உள்பட வேளாண் கருவிகளை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ளும் நடைமுறை குறித்தும், பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதிலாக புதிய மின் மோட்டாருக்கு ரூ.15,000 வழங்குதல் குறித்தும் விளக்கி கூறினார்.மேலும், உதவித் தோட்டக்கலை அலுவலர் பெலிக்ஸ் யேசுதாஸ், பட்டு வளர்ச்சி துறை சார்பில், ஆய்வாளர் சசிகலா, உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ், உதவித் தொழில்நுட்ப மேலாளர்கள் திருப்பதி, சண்முகம் உள்ளிட்டோரும் விளக்கி பேசினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் நன்றி கூறினார்.