கடத்தூர் அரசு பள்ளி முன்பு சாலையை கடந்த சிறுவன் பைக் மோதியதில் காயம் வேகத்தடை அமைக்க கோரிக்கை
கடத்தூர், செப். 3: கடத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி கடத்தூர் - அரூர் புட்டிரெட்டிப்பட்டி பிரிவு சாலையில் அமைந்துள்ளது. இந்த பள்ளியின் எதிரே உள்ள சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால், சாலையை கடக்கும் மாணவ, மாணவிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் ராம்சரண் என்ற சிறுவன், நேற்று மாலை பள்ளி முடிந்ததும், வெளியே வந்து சாலையை கடக்க முயன்றான். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பைக் மோதியில் சிறுவன் காயமடைந்தான்.
அக்கம் பக்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள், சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் விபத்தை ஏற்படுத்தி பைக்கில் வந்தவர் நிற்காமல் சென்றுவிட்டார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இப்பள்ளியின் முன்பாக உள்ள சாலையில், வேகத்தடை சிறியதாக உள்ளதால், வாகனங்கள் வேகத்தை குறைப்பது இல்லை. எனவே, பள்ளியின் இருபுறமும், பெரிய அளவில் வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மேலும், பள்ளியின் முன்பாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்,’ என்றனர்.