அரசு அலுவலர்கள், மாணவர்கள் வசதிக்காக மொரப்பூரில் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் நிறுத்த வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
அரூர், செப்.3: மொரப்பூர் ரயில் நிலையம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரே முக்கியமான ரயில் நிலையமாகும். இந்த இரண்டு மாவட்டங்களை சேர்ந்த அரசு அலுவலர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் மொரப்பூர் அதிகாலை 3.38 மணிக்கு வந்து சென்னைக்கு காலை 8.05 மணிக்கு சென்று சேரும். மங்களூரு எக்ஸ்பிரஸ் கடந்த சில வருடங்களாக நிற்பதில்லை. இதனால் ஏராளமான அரசு அலுவலர்கள், பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதிகாலையில் சென்னை செல்லும் கல்லூரி மாணவர்களுக்கு, மிகவும் பயனுள்ளதாக இருந்த மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்வதை ரத்து செய்துள்ளதால், மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை மொரப்பூர் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘கொரோனா காலத்தில் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர், சில ரயில்கள் நின்று செல்கிறது. எனவே, அரசு அலுவலர்கள், மாணவர்கள் நலன் கருதி மொரப்பூர் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்களை ரத்து செய்ததை, ரயில்வே நிர்வாகம் உடனடியாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.