இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டம்; மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 7,838 பேருக்கு மருத்துவ சிகிச்சை
தர்மபுரி, செப்.3: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், 5 அரசு மருத்துவமனைகள் மற்றும் 4 தனியார் மருத்துவமனைகளில் விபத்தில் பாதிக்கப்பட்ட 7,838 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்திடும் நோக்கில், தமிழக அரசால் இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை, தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது. இந்த திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு, முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தேர்ந்து எடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு, நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே, முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் (81 ட்ரீட்மெண்ட் பேக்கேஜஸ்) சிகிச்சை அளிக்கப்படும். 48 மணி நேரத்திற்கு மேலும், பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், காப்பீடு அட்டையை பயன்படுத்தியும், அல்லது தனிநபர் கட்டணம் செலுத்தியும் தொடர்ந்து சிகிச்சைகள் பெறலாம்.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் கூறியதாவது: தமிழக முதல்வர் கடந்த 18.12.2021 அன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், நம்மைக் காக்கும் 48 திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே, முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது. 48 மணி நேரத்திற்கு மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால், தொடர் சிகிச்சை தேவை பட்டால், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில், அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சையை தொடரலாம். குறிப்பாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீடு திட்டத்தில் இல்லை என்றால், நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையை கட்டணமில்லாமல் தொடரலாம்.
தர்மபுரி மாவட்டத்தில் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்கள், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட 5 அரசு மருத்துவமனைகள் மற்றும் 4 தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை விபத்தில் பாதிக்கப்பட்ட 7,838 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் ெதரிவித்தார்.