31,221 ஏக்கருக்கு நுண்ணீர் பாசன திட்டம்: 10 வட்டாரத்திற்கு ரூ.168.65 கோடி ஒதுக்கீடு
தர்மபுரி, செப்.2: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களிலும், நடப்பாண்டு 31,221 ஏக்கருக்கு நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்த ரூ.168.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயகளின் நலன் கருதி, வேளாண்மை துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விதைப்பில் தொடங்கி, விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வரை, பல்வேறு நடைமுறைக்கு மானியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது.
இதேபோல், வேளாண் பணிகளில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை புகுத்துவதற்கு, விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன். தொழில்நுட்ப கருவிகளும் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் உள்பட 5 துறை சார்பில், பருவத்திற்கு ஏற்ப விவசாயிகளுக்கான கண்காட்சிகளும் நடத்தி செயல்விளக்கம் அளித்து ஊக்கப்படுத்தப்படுகிறது. மேலும் ஊக்கப்படுத்த மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தை பொறுத்த வரை நடப்பாண்டு 10 வட்டாரங்களில் 31,221 ஏக்கருக்கு நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது. இதற்காக ரூ.168.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘விவசாயம் பிரதானமாக கொண்ட மாவட்டம் தர்மபுரி. இம்மாவட்டத்தில் 2 லட்சத்திற்கு மேலாக விவசாயிகள் விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. ஆனாலும் போதிய அளவு மழை பெய்யவில்லை. தற்போது 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழைக்கு அணைகள் இருக்கும் பகுதிகளில் நெல் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த சாகுபடி செய்யும் நேரத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தையும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
மரவள்ளி, மஞ்சள், கரும்பு, தக்காளி, கத்திரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. நுண்ணீர் பாசனத்தில் மலைப்பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட விவசாயிகள் பயன்படும் வகையில் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது வரவேற்கத்தக்கது’ என்றனர்.
இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தோட்டக்கலைத்துறை மூலம், தர்மபுரி மாவட்டத்தில் 10 வட்டாரங்களிலும், நடப்பு 2025-2026ம் ஆண்டில் 24,737 ஏக்கரில் ரூ.12,863 லட்சத்தில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வேளாண் துறை மூலம் 6,484 ஏக்கர் ரூ.4,002 லட்சத்தில் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதற்காக மொத்தம் ரூ.16,865 லட்சம் (ரூ.168.65 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நுண்ணீர் பாசனத் திட்டத்தில் காய்கறி, பழப்பயிர்கள், மரப்பயிர்கள் மற்றும் மலர், விவசாய பயிர்கள் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரியில் 10 வட்டத்தில் நடப்பாண்டு, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், இணையதளத்தில் பதிவுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார தோட்டக்கலை, வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை கொடுத்து பயன்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.