மண் குவியலை அகற்ற நடவடிக்கை
தர்மபுரி, டிச. 1: தர்மபுரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மண் குவியலை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை, தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் இருந்து காரிமங்கலம் வழியாக கிருஷ்ணகிரி- பெங்களூரு செல்கிறது. காரிமங்கலத்திலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், அகரம் பைபாஸ் முதல் மணிக்கட்டியூர் வரை செல்லும் சாலையோரம், மண் குவிந்து காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால், இந்த சாலையோரம் முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது.
மழை இல்லாத நாட்களில், இந்த சாலையோரம் உள்ள மண், காற்றினால் புழுதிக்காற்றாக வீசுகிறது.இதன் காரணமாக, இந்த இடத்தை கடந்து செல்லும் போது, டூவீலரில் செல்பவர்கள் வெள்ளைக்கோட்டை தாண்டி, சாலையின் நடுவே உள்ள பாதைக்குள் பயணிக்கின்றனர். இதனால் டூவீலரில் பின்னால் வேகமாக வரும் வாகனங்கள், டூவீலரின் மீது மோதும் அபாய நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் நடந்து செல்பவர்களும் கடும் அவதிப்படுகின்றனர். வாரத்திற்கு ஒரு முறையாவது, இந்த சாலையோரம் உள்ள மண்ணை அகற்றினால் இந்த வழியாக செல்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். எனவே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணலை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.