சூலூரில் பட்டா கேட்டு நில நுழைவுப்போராட்டம் பொதுமக்களிடம் துணை வட்டாட்சியர் பேச்சு வார்த்தை
சூலூர்,ஜூலை8: கோவை மாவட்டம், சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 32 ஏக்கர் அளவில் கண்டிஷன் பட்டா பூமிகள் இருந்துள்ளது. இதை தனியாரிடமிருந்து மீட்டு அரசு நிலமாக நில உபயோக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் துணை மின் நிலையம் அமைக்க ஏற்கனவே ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நிலத்தில் உரிமையாளர்கள் என கூறிக்கொண்டு சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.கண்டிஷன் பட்டா நிலத்தில் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் அருந்ததிய மக்கள் முன்னேற்ற கழக தலைவர் மணியரசு தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த பகுதியில் நேற்று திடீரென நில நுழைவுப்போராட்டம் நடத்தினர்.
நேற்று காலை தொடங்கிய போராட்டம் மாலை வரை நீடித்தது. இதையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சூலூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதைத்தொடர்ந்து சூலூர் துணை வட்டாட்சியர் முத்துமாணிக்கம் மற்றும் செலக்கரச்சல் வருவாய் ஆய்வாளர் அப்பநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் போராட்டம் நடத்திய பொது மக்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சம்பந்தப்பட்ட இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தற்போது எதுவும் செய்ய முடியாது எனவும் நீதிமன்ற வழக்கு முடிந்தவுடன் நில பட்டா கேட்டு கோரிக்கை மனு அளித்தவர்களுக்கு கண்டிப்பாக நிலங்களை பிரித்து பட்டா வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். திடீரென பொதுமக்கள் பட்டா கேட்டு நில நுழைவுப்போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.