அரியலூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்
தா.பழூர், ஜூலை 15: அரியலூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதார நிலையத்தின் கீழ் உள்ள டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் அரியலூர் மாவட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா, உள்ளிட்ட காய்ச்சல்கள் மற்றும் கொரோனா உள்ளிட்ட இதர வைரஸ் நோய்களின் ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள டெங்கு கொசு புழு களப்பணியாளர்கள் பணி 20/5/2025 அன்று முடிவடைந்து விட்டது. ஆகையால் தற்பொழுது பணிகள் இல்லாத நிலையில் பொருளாதார சூழ்நிலையில் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் இவர்களது குடும்பம் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையில் உள்ளது. ஆகையால் இதனை கருத்தில் கொண்டு டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இதில் டெங்கு கொசு ஒழிப்பு முன் களப்பணியாளர் சங்கத்தின் சார்பாக அரியலூர் மாவட்ட தலைவர் கவிதா, தா.பழூர் துணைத் தலைவர் செந்தில்குமார், பொருளாளர் ரவி மற்றும் தேவதாஸ், மகாராஜன், பெரியசாமி, தங்கராசு, கண்ணன் உள்ளிட்டோர் மனுக்களை அளித்தனர்.