சிவகங்கை ஜிஹெச் கட்டுமானப்பணிகளில் குறைபாடு: ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப அமைச்சர் உத்தரவு
சிவகங்கை, மே 22: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூடுதல் கட்டிட கட்டுமானப்பணிகளில் குறைபாடு இருந்தது. இதையடுத்து ஒப்பந்ததாரரை அழைத்து எச்சரித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்ப அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார். சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 28 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஒரு கட்டிடமும், ரூ.10 கோடி மதிப்பீட்டில் மற்றொரு கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது. ஈரோட்டைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம் இப்பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது. கடந்த கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், ஆய்வகம், தீவிர சிகிச்சை பிரிவு, என பல்வேறு பிரிவு வளாகங்கள், அறைகளின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்குள் கட்டுமானப்பணிகளை முடிக்க வேண்டும். இந்நிலையில் நேற்று சிவகங்கை மாவட்டத்தில் சாலை, கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப்பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எவ.வேலு ஆய்வு செய்தார். சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களையும் ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகளில் குறைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து உடனடியாக ஒப்பந்ததாரரை அழைத்து கண்டித்தார்.
மேலும் கட்டிட வெளிப்புறத்தில் உள்ள முகப்புத் தோற்றத்தை சுட்டிக்காட்டி தமிழகத்தில் ஆம்பூர், திருப்பத்தூர், குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் தோற்றம் குறித்து தெரிவித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். மேலும் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். கட்டிட கட்டுமானப்பணிகள், சாலைப் பணிகளில் தரம் குறைவு மற்றும் முறைகேடுகள் இருந்தால் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். பணிகளை தரமாக செய்யாததால் ஒப்பந்ததாரர் மற்றும் துறை அதிகாரிகளை அமைச்சர் எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடன் அமைச்சர் ேக.ஆர்.பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.