அரசு மருத்துவமனையில் டைல்ஸ் கற்கள் சேதம்
திருப்பூர், ஜூலை 9: திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சளி, காய்ச்சல் முதல் அறுவை சிகிச்சை வரை பல்வேறு சிகிச்சைகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். சிலர் வெளி நோயாளிகளாகவும், சிலர் உள் நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை சந்திக்க தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்லக்கூடிய முக்கிய இடமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது.
இதன் முதல்தளத்தில் டைல்ஸ் கற்கள் சேதமடைந்து காணப்படுகிறது. பல்வேறு சிகிச்சைகளுக்கு வரும் பொதுமக்களும் முதல் தளத்தில் உள்ள மருந்தகத்தில் மருந்து மாத்திரைகள் வாங்க செல்கின்றனர். அந்த நேரத்தில் உடைந்த பகுதிகளின் மீது கால்வைக்கும் பட்சத்தில் காயங்கள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுபோன்ற சேதங்களை உடனுக்குடன் கண்காணித்து சரிசெய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.