உல்லாசமாக இருந்துவிட்டு காதலியை ஏமாற்றிய வாலிபர் வேறு பெண்ணுடன் நடக்கவிருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து
பாகூர், ஆக. 30: கிருமாம்பாக்கம் அடுத்த கடற்கரை கிராமத்தை சேர்ந்த 22 வயதுள்ள ஒரு பெண்ணும் நரம்பை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 2022 அக்டோபர் மாதம் புதுச்சேரி கடற்கரை அருகே உள்ள ஒரு தனியார் லாட்ஜூக்கு மணிகண்டன் அந்த பெண்ணை அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அதன்பிறகு, இவர்கள் அடிக்கடி பலமுறை தனிமையில் சந்தித்து வந்துள்ளனராம்.
இந்நிலையில், மணிகண்டன் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டாராம். அதன் பிறகு இருவரும் போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது மணிகண்டன் அந்த பெண்ணிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் எவ்வளவு பவுன் போடுவார்கள்? என்று கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மணிகண்டனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து வந்த மணிகண்டனிடம் பாதிக்கப்பட்ட பெண் பேச முயற்சித்துள்ளார். அவர் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து விட்டார். கடந்த திங்கட்கிழமை அன்று மணிகண்டனுக்கும் நிச்சயதார்த்தம் செய்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளதாக தெரிகிறது. மேலும் நேற்று அவர்களுக்கு நரம்பை கோயிலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருந்தது. இதனை அறிந்த பாதிக்கப்பட்ட பெண் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை தவறாக நடந்து கொண்ட மணிகண்டன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார், மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இதனால் நேற்று நடக்க இருந்த வரவேற்பு நிகழ்ச்சி ரத்தாகிவிட்டது. இச்சம்பவம் நரம்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.