மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு மேம்பாலத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து
மயிலம், ஆக. 29: மயிலம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டு மேம்பாலத்தில் பின்னோக்கி இயக்கப்பட்ட அரசு பேருந்தின் மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் மயிலம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் மேம்பாலத்தின் மேலே சென்றதால் கூட்டேரிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டிய பயணிகள் ஓட்டுநரிடம் சண்டையிட்டனர். இதனைத் தொடர்ந்து மேம்பாலத்தின் அருகே செல்லும் சாலையில் செல்வதற்காக ஓட்டுநர் மேம்பாலத்தில் இருந்து பேருந்தை பின்னோக்கி அலட்சியமாக இயக்கியுள்ளார். இந்நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முட்டைகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களோடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அரசு பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இருவரிடமும் சரமாரியாக கேள்வி எழுப்பி சண்டையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.