இறந்தவர் பெயரில் முறைகேடாக பட்டா வருவாய்த்துறை அலுவலர்களை கண்டித்து தாய், மகன் தீக்குளிக்க முயற்சி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
விழுப்புரம், அக். 28: விழுப்புரம் அருகே இறந்தவர் பெயரில் முறைகேடாக பட்டா வழங்கிய வருவாய்த்துறை அலுவலர்களை கண்டித்து தாய், மகன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. ஆட்சியர் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டது. அப்போது மனு அளிக்க வந்த தாய், மகன் இரண்டு பேரும் தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி கேனை பிடுங்கினர். தொடர்ந்து விசாரணையில், விழுப்புரம் அருகே டட் நகரை சேர்ந்த அருளானந்தன் மனைவி அன்னம்மாள், மகன் மைக்கேல் டிசோஸ் என்பது தெரியவந்தது. தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அவர்கள் கூறுகையில், மூன்று தலைமுறையாக உள்ள பூர்வீக வீட்டுமனையை தவறுதலாக இறந்துவிட்ட அந்தோணிசாமி பெயரில் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது.
இதனை ரத்து செய்யக்கோரி பல ஆண்டுகளாக மனு கொடுத்து வருவாய்த்துறை மூலமாக முழுமையாக விசாரணை நடத்தினர். கோட்டாட்சியர் மூலம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால் இதுவரை பட்டா திருத்தி மாற்றப்படவில்லை. இதன் காரணமாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எந்தவித அளவீடும் செய்யாமல், முறைகேடாக இறந்துவிட்ட நபரின் பெரியல் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்திடவும், அந்த முறைகேட்டில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து போலீசார் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. கோரிக்கை குறித்து ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு சென்றனர்.