விருத்தாசலத்தில் ரயில் பயணியிடம் நகை பறித்த வாலிபர் கைது
விருத்தாசலம், அக். 28: கரூர் மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி (30). கார் டிரைவர். இவரும், நண்பர் சரத்குமார் என்பவரும் நேற்று முன்தினம் இரவு சென்னை எக்மோரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். செங்கல்பட்டு அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது இருவரும் தூங்கிவிட்டனர். விழுப்புரம் அருகே சென்றபோது கண் விழித்துள்ளனர். அப்போது கருப்புசாமியின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த தங்க செயின், ஒரு மோதிரம், ஒரு தோடு உள்ளிட்ட 2 பவுன் நகைகளை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் தேடி பார்த்தபோது கிடைக்கவில்லை. அவரது அருகில் அமர்ந்திருந்த நபரை பார்த்தபோது வேறு இடத்தில் அமர்ந்திருந்து உள்ளார். அவரிடம் சென்று விசாரித்தபோது தெரியாது எனக் கூறிவிட்டார்.
அதற்குள் ரயில் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது விருத்தாசலம் ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்ததன்பேரில் போலீசார் அந்த நபரை விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை பூலாங்குடி இருப்பு புளியரை பகுதியை சேர்ந்த சுந்தரேசன் மகன் காளிதாஸ் (21) என்பதும், கருப்புசாமி நகைகளை எடுத்து மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து காளிதாஸ் மீது சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா, தனிப் பிரிவு தலைமை காவலர் ராம்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரின் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 2 பவுன் நகைகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.