யார்... முக்கிய தலைவர்...? செங்கோட்டையன், மனோஜ் பாண்டியன் எல்லாம் அதிமுகவே கிடையாது
விழுப்புரம், நவ. 25: அதிமுகவில் முக்கிய தலைவர்கள் மாற்றுக் கட்சியில் இணைவது குறித்து கேள்விற்கு கோபமான சி.வி.சண்முகம் எம்பி, யார்... முக்கிய தலைவர்... செங்கோட்டையன், மனோஜ் பாண்டியன் எல்லாம் அதிமுகவே கிடையாது என்று கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்கள் காரணமாக மூத்த நிர்வாகிகள் பலரும் மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது முதல் அவர் சந்தித்த அனைத்து தேர்தலிலும் அக்கட்சி படுதோல்வியை சந்தித்து வருகிறது. இதற்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பதால் தோல்வியை கண்டு வருகிறோம், எனவே இந்த கூட்டணியில் சேராமல் வரவுள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டுமென்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் இவர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி, எடப்பாடி பழனிசாமி பாஜவுடன் மீண்டும் கூட்டணி வைப்பதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவித்தார். இதனால் அக்கட்சியில் மூத்த நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமி மீது ஏற்பட்ட அதிருப்தியில் அண்மைக்காலமாக மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். மாற்றுக் கட்சியில் இணையும் ஒவ்வொருவரையும் அதிமுகவிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார். ஏற்கனவே ஓபிஎஸ் பிரிந்து சென்ற நிலையில், டிடிவி தினகரன், சசிகலா என்று பல்வேறு கோஷ்டிகளாக அதிமுக செயல்பட்டு வருகிறது. தற்போது செங்ககோட்டையனும் பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர ேவண்டும் என்ற கருத்தை முன்வைத்ததால் அவரையும் கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார்.
இந்நிலையில் விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவில் முக்கிய தலைவர்கள் மாற்றுக்கட்சியில் இணைந்து வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வுக்கு பதிலளித்த அவர், யார்?... முக்கிய தலைவர்... என்று கோபத்துடன் கைநீட்டிய பேசிய சி.வி.சண்முகம், செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்கியாச்சி என்று இரண்டு முறை ஆவேசத்துடன் கூறினார். தொடர்ந்து கூறுகையில், மனோஜ் பாண்டியன் ஓபிஎஸ் குரூப்பில் இருக்கார்ன்னு சொல்லுங்க. உங்கள் சவுகரியத்திற்கெல்லாம் நாங்கள் சொல்ல முடியாது. மனோஜ்பாண்டியன் ஓபிஎஸ் குரூப்பு. அதை முதலில் போடுங்க என்று டென்ஷடனுடன் பதிலளித்து விட்டு சென்றார்.
மேலும் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து கேட்டபோது பதிலளிக்காமல், அதெல்லாம் தற்போது வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றார். சி.வி.சண்முகம் எம்பியின் இந்த கருத்துக்கு ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தவர்களை அதிமுகவே கிடையாது என்று கூறும் இவர்தான் உண்மையான அதிமுகவே கிடையாது. அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டு மோடி, அமித்ஷா என பாஜக துதியை பாடிக் கொண்டிருக்கிறார். பாஜக துதிபாடி தற்போது கூட்டுக் குழுவில் பதவியை வாங்கியுள்ளார். தற்போது அவர், பதவிக்காக கண்மூடித்தனமாக வாய்க்கு வந்ததெல்லாம் கடந்த காலத்தை மறந்து பேசி வருவதாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவ்விவகாரம் அதிமுக உள்கட்சி மோதலை, விரிசலை மேலும் அதிகப்படுத்தி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.