புதுவை பெண் உள்பட 4 பேரிடம் பண மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
புதுச்சேரி, செப். 23: புதுச்சேரி முதலியார்பேட்டை சேர்ந்த ஆண் நபர் ஒருவர், சென்னையில் வீடு வாடகைக்கு உள்ளதா என்று செயலி மூலம் பார்த்தபோது, அதிலிருந்த மர்ம நபரின் தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, மர்ம நபர் வீட்டுக்கு முன்பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறி பணம் கேட்டுள்ளார். இதனை நம்பி மேற்கூறிய நபரும், மர்ம நபருக்கு ரூ.24 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். பின்னர், மர்ம நபர் பணத்தை பெற்றவுடன் மேற்கூறிய நபரின் இணைப்பை துண்டித்துவிட்டார். மேலும், காலாப்பட்டை சேர்ந்த பெண் ஒருவர், இணையதளத்தில் ஆன்லைன் முதலீடு குறித்து விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். பின்னர், அதிலிருந்த லிங்க் மூலம், அப்பெண் ரூ.13 ஆயிரத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.
ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரை, மர்ம நபர் தொடர்புகொண்டு லோன் அதிகாரி பேசுவதாகவும், குறைந்த வட்டியில் லோன் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி, அப்பெண்ணும் லோனுக்கு விண்ணப்பித்து, விண்ணப்பம் மற்றும் செயலாக்க கட்டணமாக ரூ.16 ஆயிரத்தை அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். மூலகுளத்தை சேர்ந்த ஆண் நபரை, மர்ம நபர் தொடர்புகொண்டு கேரளா லாட்டரி ஏஜெண்ட் பேசுவதாகவும், தாங்கள் லாட்டரி மூலம் ரூ.8 லட்சம் வென்றுள்ளதாக கூறியுள்ளார். இப்பணத்தை பெறுவதற்கு, செயலாக்க கட்டணம் செலுத்தமாறு மர்ம நபர் கூறியுள்ளார். இதனை நம்பி, அந்த பெண் ரூ.8 ஆயிரத்தை அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.61 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.